சென்னை: சனி பகவானின் பரிகார தலம் பற்றி தெரியுங்களா. தெரிந்து கொள்வோம் வாங்க.
புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலை குளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்பக்கிரகத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு எழுந் தருளியள்ள சிவ பெருமானை வழிபட வேண்டும்.
அவரை தரிசித்து வலம் வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். இத்தலம் பேரளம் காரைக்கால் ரெயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரிசொல் நதிக்கும். வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகின்றது.
இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பிபராண்யம் நகவிடங்கபுரம், நாளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல்+ஆறு திருநள்ளாராயிற்று. இறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த தலமாகும்.
இறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்ப்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.
சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர்.