திருமலை: வேலூர் பொற்கோயில் போன்று ஏழுமலையான் வீற்றிருக்கும் கர்ப்பகிரகம் உள்ளிட்ட தங்க விமான கோபுரத்தின் கீழ் சுவர்கள் முழுவதும் தங்க தகடுகளை பொருத்த 2008-ல் அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் தலைவர் ஆதிகேசவுலு நாயுடு விரும்பினார். இதற்கு அறங்காவலர்களும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கம் காணிக்கை பெற முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும், ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமானோர் கிலோ கணக்கில் தங்கத்தை காணிக்கையாக வழங்க துவங்கினர். ஏழுமலையானுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கம் காணிக்கை செலுத்தத் தொடங்கினர். இவர்கள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் கோடிக்கணக்கில் தங்கத்தை நன்கொடையாக அளித்தனர்.
இந்நிலையில், சுவரில் தங்கத் தகடுகளை நிறுவும் போது, அதில் ஓட்டைகள் போட வேண்டும். அவ்வாறு ஓட்டைகள் ஏற்படுத்தப்பட்டால் கர்ப்பகிரஹம் சன்னதியைச் சுற்றியுள்ள தமிழ் கல்வெட்டுகள் அழியும் அபாயம் உள்ளது. கர்ப்பகிரக சன்னதியை வலுவிழக்கச் செய்யும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று சில பக்தர்கள் கோவிலை வலியுறுத்தினர். சில இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து மேலும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்தத் திட்டத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, கோவிலுக்கு பல டன் தங்கம் காணிக்கையாக வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, இத்திட்டத்தை கைவிட்ட தேவஸ்தானம், அந்தந்த பக்தர்களுக்கு தங்கத்தை திருப்பி அளிக்க முடிவு செய்து, அறிவித்தது. ஆனால், சிலர் வாங்க மறுத்துவிட்டனர். இதை வாங்க மறுத்த சில பக்தர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளாக திருப்பதி கோயில் அதிகாரிகள் எவ்வித சலுகையும் வழங்கவில்லை.
ஆனால், தற்போது அறங்காவலர் குழுவின் தலைவராக வந்துள்ள பி.ஆர்.நாயுடு, இந்த நன்கொடையாளர்களுக்கு தற்போது பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளார். அதன்படி, தங்கம் தானம் செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். அவர்கள் ஒரு வருடத்தில் 3 நாட்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்படும். மேலும், 20 சிறிய லட்டு பிரசாதங்கள், ஒரு ஜாக்கெட் துண்டு, ஆண்களுக்கான அங்க வஸ்திரம் ஆகியவையும் வழங்கப்படும்.
5 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 50 கிராம் வெள்ளி டாலர்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்கொடையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.