தஞ்சாவூர்: தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பெரு விழாவாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன்படி, தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் அடிகளார் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில், புது நெருப்பு, புது நீர் புனிதம் செய்யும் சடங்குகள், மறையுரை, கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றன. இதையடுத்து, இறை மக்கள் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், வியாகுல மாதா ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்தெழுந்த காட்சியை நினைவுகூரும் விதமாக உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இயேசுவின் உயிர்த்த ஆண்டவரின் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, பவனியாக திரு இருதய பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அதிகாலை கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
இவ்வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், உதவிப் பங்குத் தந்தையர்கள் எஸ். அரவிந்த், எம். ஜெனித் லாரன்ஸ், மறை மாவட்டப் பொருளாளர் எஸ். சேசுராஜ், திட்டக் குழுச் செயலர் ஜான் பீட்டர், ஆயரின் செயலர் ஷெரில் கியூபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.