சென்னை: கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். ராமாவதாரத்தில் அவரால் விடப்பட்ட சில அரும்பெரும் செயல்களை, கிருஷ்ணாவதாரத்தில் திருமால் உபதேச மொழியாக எடுத்துரைத்தார். 125 ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்திருந்தாலும், அவர் செய்த அருட் செயல்கள் கணக்கில் அடங்காதவைகள்.
பிறக்கும் பொழுதே, தான் திருமாலின் அவதாரம் என்பதை வெளிக்காட்டினார். உலகில் மலிந்து கிடந்த தீயச்செயல்களை மாய்த்து, நன்னெறிகளைப் பரப்பினார். அதேபோல் தீயவர்களை ஒழித்து, நல்லவர்களைக் காத்தருளினார். பூமாதேவியும், “தீயவர்களின் செயலால், அச்சுமையைத் தாங்காமல், நீரில் மூழ்கும் நிலையில் உள்ள என்னைக் காக்க வேண்டும் ” என்று பிரம்மதேவனிடம் முறையிட்டதன் பலனாகவும், இந்த அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று.
முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் திருமாலின் உதவியால் தேவர்கள் வெற்றி பெற்றனர். அசுரர்கள் கொல்லப்பட்டனர். திருமாலின் திருக்கரத்தால் கொல்லப்பட்ட பல அசுரர்கள் மோக்ஷம் அடைந்தார்கள். காலநேமி போன்ற சில அரசர்கள் மிஞ்சிய கர்மத்தால், பூமியில் கம்சன் போன்றவர்களாகப் பிறந்தனர். அந்த அசுரர்களின் சுமை தாங்க முடியாமல் பூமாதேவி, பிரும்ம தேவனிடம் முறையிட்டதை, முன்பே தேவர்களும் கூறியிருந்தார்கள். அதற்கு பிரம்மதேவனும், “பூமாதேவியின் முறையீட்டை அறிவேன், தேவர்களையும், பூமாதேவியையும் காப்பதற்கு திருமாலே தகுதியுள்ளவர். ஆதலால் நாம் எல்லோரும் பாற்கடலுக்குச்சென்று, நாராயணனை வணங்கி முறையிடுவோம் ” என்றார்.
அதன்படி எல்லோரும் முறையிட்டு சென்று முறையிட்டனர். அசுரர்கள் மனிதப் பிறவிகள் எடுத்து, தேவர்களுக்கும், மூவுலகத்தாருக்கும் துன்பம் இழைக்கிறார்கள். அதற்குச் செய்ய வேண்டியது எதுவோ அதனை நியமித்து அருள் செய்ய வேண்டும் ” என்று பிரம்மா பிரார்த்தித்தார். திருமாலும் , “பயத்தை அளிக்கும், கம்சன் போன்ற அசுரர்களால் பூமிக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட துயரத்தைப் போக்கி அவர்களை அழிக்க, நான் யாதவ குலத்தில் முழு உருவத்துடன் அவதரிக்கிறேன்.
தேவர்களும், தேவப்பெண்களுக்கும் ஓர் அம்சத்துடன் என்னைப் பூஜிப்பதற்காகப் பிறக்கட்டும் என்றருளினார். இதைக்கேட்ட தேவர்கள் நிம்மதியுடன் தங்கள் இருப்பிடம் சென்றனர். இவ்வாறு கிருஷ்ணர் பூமியில் மதுரா நகரத்தின் அரசனான வசுதேவர், தேவகிக்கு மகனாக பிறந்தார். கம்சனை அழித்தார். பூவுலகில் கண்ணன் பிறந்த இப்பொன்னாளை அஷ்டமி திதி, ரோகிணி நக்ஷத்திரம் ஆகிய இரண்டு தினமும் கொண்டாடுகிறார்கள். முன்னும் பின்னும் ஸ்ரீ ஜயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் பண்டிகையாகவும் விரதமாகவும், உற்சவமாகவும் கொண்டாடுகிறார்கள்.
ஸ்ரீகிருஷ்ணஜயந்தி பண்டிகையை, பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரிஜகந்நாத், பண்டரீபுரம் ஆகிய க்ஷேத்திரங்களில் மிகவும் விசேஷமாக சிறப்பாக விண்ணும், மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணஜயந்தியில் வழுக்கு மரம் ஏறுவதையும், உறி அடித்திருநாளாக உறி அடிப்பதையும் மக்கள் விளையாட்டாகக் கொண்டு, கொண்டாடுகிறார்கள்.