சென்னை: ஆச்சரியம் நம் முன்னோர்களின் கலைத்திறனை கண்டால் ஆச்சரியம்… ஆச்சரியம்தான். கல்லிலும் கலைவண்ணம் மட்டுமின்றி இசையும் வர செய்த பெருமை நம் முன்னோர்களின் அசாத்திய திறனுக்கு எடுத்துக்காட்டு. இதை எப்படி செய்தார்கள்… யார் அறிவார் இந்த ரகசியம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் கோழிக்குத்தி கிராமத்தில் உள்ள வானமுட்டி பெருமாள் கோயிலில் உள்ள அனுமன் சிலையின் உடலை தட்டினால், ஏழு வித சப்தங்கள் கேட்கும் என்கின்றனர். ஆஞ்சநேயரின் உடலின் பல்வேறு இடங்களில் தட்ட, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சப்தம் கேட்கிறது. இது ஒரு வியப்பு என்றால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வானமுட்டி பெருமாள் பெயருக்கேற்றார் போல 16 அடி உயரத்தில், 6 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார். இந்த திரு உருவம் ஒரே அத்தி மரத்தில் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்திலிருந்து அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதரின் சிலை வெளியில் எடுத்து அத்தி வரதர் வைபவம் என்ற விழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 2019 ஜூலை மாதம் அத்தி வரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவை தொடர்ந்து அத்தி மரத்தினால் செய்யப்பட்ட சிலைகள் உள்ள கோயில்கள் பிரபலமாக தொடங்கின. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் கோழிக்குத்தியில் உள்ள வானமுட்டி பெருமாள் கோயிலில் 16 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்தால் செய்யப்பட்டு பிரமாண்டமாக காட்சி தருகின்றார்.
வானமுட்டி பெருமாள் என்கிற ஸ்ரீனிவாசபெருமாள் பெயருக்கேற்றார் போல 16 அடி உயரத்தில், 6 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான தோற்றத்தில் உள்ளார். இந்த திரு உருவம் ஒரே அத்தி மரத்தில் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தி மரத்தின் வேர் பெருமாளின் திருவடியாக அமைக்கப்பட்டுள்ளது.
அத்தி வரதர் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார். அத்தி மரத்தினால் சிலை செய்யப்பட்டு, இயற்கை மூலிகைகள் மூலம் வர்ணம் தீட்டப்பட்டுள்ள பெருமாள் 1000 ஆண்டுகளை கடந்தவர் என்று ஸ்தல வரலாறு வாயிலாக கூறப்படுகிறது. இந்த வானமுட்டி பெருமாள் கோயிலில் கிபி 7ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு ஆகியவற்றில் கிரந்த மொழியில் எழுதப்பட்ட 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 3ம் குலோத்துங்க சோழன் இந்த கோயிலுக்கு மானியங்கள், திருக்கோயில் பணிகள் செய்ததாக கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
இக் கோயிலில் உள்ள அனுமன் சிலையின் உடலை தட்டினால், ஏழுவித சப்தங்கள் கேட்குமாம். ஆஞ்சநேயரின் உடலின் பல்வேறு இடங்களில் தட்ட, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சப்தம் கேட்கிறது. மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சோழன்பேட்டை கிராமத்திற்கு அருகில், காவிரிக்கரை அருகே இந்த சிறப்பு மிக்க ஆலயம் அமைந்துள்ளது.