இந்து கலாச்சாரத்தில் பூஜையறை என்பது ஒரு மகத்தான ஆன்மீக முக்கியத்தை கொண்ட இடமாக கருதப்படுகிறது. இங்கு குடும்பங்கள் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வதால், வாழ்க்கையில் புனிதமான ஆற்றலையும், அதிர்ஷ்டத்தை ஈர்க்க முடியும் என்றும் நம்புகின்றனர். பூஜை அறையின் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றி மற்றும் செழிப்பை அடையவும் சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். தீபம் : இந்துக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது ஒரு வழக்கமாக இருக்கிறது.
காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றுவது நன்மையாக கருதப்படுகிறது. குறிப்பாக பூஜையறையில் விளக்கேற்றுவதும், அதை வைத்து வழிபாடு நடத்துவதும் முக்கியமானது என்பதால், தீபம் பூஜையறையில் இருக்க வேண்டும் ஊதுபத்திகள் : இந்து பாரம்பரியத்தில் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியில் இருந்து வரும் புகையானது, மனதை தூய்மைப்படுத்தும் குணத்தை கொண்டதாக கருதப்படுகிறது. எனவே, பூஜையறையில் ஊதுபத்திகள், சாம்பிராணிகள் போன்றவற்றை எரிப்பது மிகவும் நல்லது. பிரார்த்தனை, தியானம் போன்ற சூழ்நிலைகளில் இந்த புகை மிகவும் நல்லது என்று கூறப்படுவதால், ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி இவை இரண்டும் பூஜையறையில் இருப்பது நல்லது.
பிரார்த்தனை மணி : பூஜையின்போது மணியோசை எழுப்புவது மிகவும் முக்கியமான ஒன்று. இது புனிதமான சூழ்நிலையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், இதை பூஜையறையில் வைத்திருக்க வேண்டும். இதில் இருந்து ஏற்படும் அதிர்வு எதிர்மறை சக்திகளை விரட்டி, ஆன்மீக ரீதியில் செழுமைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. நீர் : பூஜையறையில் கங்கை நீர் அல்லது ஏதாவது ஒரு புனிதமான நதியின் நீரை வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த புனித நீர் பூஜையறையை சுத்தீகரித்து, பாதுகாப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. அத்துடன், இந்த புனித நீரின் சில துளிகளை நாள்தோறும் பூஜை அறையில் தெளிப்பது மிகவும் நல்லது என்றும் ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
புனித நூல்கள் : பூஜையறையில் எப்போதும் பகவத் கீதை, ராமாயணம் அல்லது பிற புனித நூல்களை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அத்துடன், நாள்தோறும் புனித நூல்களை வாசிப்பது ஆன்மீக பரிணாமத்தை வளர்ப்பதாகவும், இறைவனுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. தெய்வச் சிலைகள் : பூஜை என்பது தெய்வங்களுக்காக செய்யப்படுவதால், விநாயகர், லட்சுமிதேவி, சிவன், ராமர் குடும்பம் ஆகிய சிலைகளை பூஜையறையில் வைத்திருப்பது புனிதமான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. தெய்வங்களின் சிலைகளை வழிபடுவதன் மூலம், ஆசீர்வாதம், ,செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும், நேர்மறையான நல்வாழ்வுக்கு வழி வகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.