மூலவர்: வடமூலநாதர்
அம்பாள்: அருந்தவ நாயகி
வரலாறு: ஒரு காலத்தில், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி இல்லாமல் உலகம் இருளில் மூழ்கியது. பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, சிவபெருமான் பார்வதியிடம், “விளையாட்டுத் தவறு செய்தாலும் பிறருக்குத் தீங்கு செய்தால் அது பாவம். எனவே இதற்குப் பிராயச்சித்தமாக நீ என்னை விட்டுப் பூலோகம் சென்று தவம் செய்து கடைசியாக யோகவனத்தில் தங்க வேண்டும். நான் அங்கே வந்து உன்னுடன் சேர்ந்து கொள்கிறேன்” என்றார். அதன்படி பார்வதி யோகவனத்தில் களிமண்ணால் சிவலிங்கம் செய்து ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் சேர்ந்தான். அந்த யோகவனம்தான் இன்றைய பழுவூர். அம்மன் தவம் செய்ததால் அம்பாள் அருந்தவ நாயகி என்று அழைக்கப்படுகிறார்.
கோவில் சிறப்பு: பழு என்றால் ஆலமரம். இப்பகுதியில் புனிதமான ஆலமரம் அதிகமாக இருப்பதால் திருப்பழுவூர் என்று பெயர் பெற்றது. எனவே இறைவன் ‘ஆலந்துறையார்’ என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாகப் போற்றப்படும் சிவபெருமானுக்கு சாம்பிராணித் தைலம் தடவப்படுகிறது. பங்குனி 18-ம் தேதி சூரியன் இத்தலத்து இறைவனை தன் கதிர்களால் வழிபடுகிறார்.
சிறப்பு: அன்னை ரேணுகாதேவியைக் கொன்ற பாவத்தைப் போக்க பரசுராமர் வழிபட்ட தலம் இது என நம்பப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. உள்பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. மகாலட்சுமி, லிங்கோத்பவர் அருபதுமூவர், சிவன் துர்க்கை சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை: பரசுராம தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
அமைவிடம்: கீழப்பழுவூர் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 மற்றும் மாலை 4.30-இரவு 8.30 வரை.