சென்னை: விரைவில் பயன் தரக்கூடிய விரத முறை… இன்று தை மாத கிருத்திகை தினம். முருகனுக்கு உகந்த தினம். இறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்கு மற்ற எல்லா வழிபாட்டு முறைகளை விட விரைவில் பலன் தரக் கூடியதாக விரத வழிபாட்டு முறை இருக்கிறது.
நிறைய பேர், விரதம் இருப்பது என்றால், தன்னை வருத்திக் கொண்டு பட்டினி கிடப்பது என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இன்றைய மருத்துவமும் உண்ணா நோன்பினை மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே சொல்கிறது. உண்ணா நோன்பிருக்கும் போது உடலும், மனமும் சுத்தமாகிறது.
தமிழர்களின் விருப்பத்திற்குரிய கடவுளான முருகனை வழிபடுவதற்கு கந்த சஷ்டி விரதத்தை போன்றே சிறந்த பலன்களை அளிக்க கூடியது “கார்த்திகை விரதம்”. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று அன்பர்களால் அழைக்கப்படும் முருகனின் அருளைப் பெற மேற்கொள்ளும் விரத முறை தான் கார்த்திகை விரதம். ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு மேல் இருக்கும் நாளே கார்த்திகை நட்சத்திர நாளாக கருத வேண்டும். கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு உட்கொண்டு அன்று இரவு உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க தொடங்க வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து நீராடி முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும் அன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் முருகனின் மந்திரங்கள், ஸ்கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது.
உணவு உட்கொள்ள வேண்டிய உடல்நிலை கொண்டவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். கார்த்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் sமுருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.
இந்த கார்த்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் மிகுந்த புண்ணிய பலன்களை அன்னதானம் செய்பவருக்கு கொடுக்கும். கார்த்திகை நட்சத்திர விரதம் மேற்கொண்டு வருபவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகள் அணுகாமை, உடல் மற்றும் மன நலம், நன்மக்கட் பேறு, செழிப்பான பொருளாதார நிலை போன்றவை முருகனின் அருளால் ஏற்படும்