சென்னை: சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று காலை, வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் முழங்க, மரத்தில் கோவில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கொடியில் மலர் தூவி வழிபட்டனர். மகா தீபாராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் கருவறையில் இருந்து கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு மலர் அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கபாலீஸ்வரர் பவள விமானத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜைகளும், புன்னைமர வாகனம், கற்பகமார வாகனம், வேங்கைமர வாகனங்களுடன் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் கிராம தெய்வ பூஜைகள் நடந்தது. கிராம தெய்வமான ஸ்ரீ கோலவிழி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஏப்., 5-ல் சக்தி நந்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி, 9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூவர் உற்சவமும், 12-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 12-ம் தேதி உமா மகேஸ்வரர் தரிசனமும், பந்தம் எரி உற்சவமும் நடக்கிறது. வரும் 14-ம் தேதி திருமுழுக்குடன் பங்குனி திருவிழா நிறைவடைகிறது.