சென்னை: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக கோவில்கள் மற்றும் புரவலர்கள் சார்பில் வழங்கப்பட உள்ள 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 குடுவைகளை முதற்கட்டமாக சென்னை பாடி மற்றும் படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் கோயிலில் அன்று யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை அனுமதிக்கவில்லை. மீண்டும் முயற்சித்தபோது, இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது. அந்தச் சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள், யானை மீண்டும் தன் பாசத்திற்காகப் பாகனைத் தட்டி எழுப்பியது. இதை எதிர்பாராமல் கோபத்தின் விளைவாகப் பார்க்கிறோம். அதன்பிறகு மீண்டும் அவரைக் குளிப்பாட்ட அழைத்துச் சென்றபோது யானை மீண்டும் மகிழ்ச்சியுடன் குளித்தது.
எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுப்போம். 27 கோவில்களில் 28 யானைகள் உள்ளன. அவர்களுக்கு குளியல் தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, தேவையான உணவு, நடைப்பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு யானைகளை தெய்வம் போல் தினமும் பாதுகாக்கிறோம். இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருக்க கூடாது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றன.
இச்சம்பவத்தில் உயிரிழந்த பாகனின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், மற்றொருவரின் குடும்பத்துக்கு கோயில் சார்பில் ரூ.2.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளை, திருச்செந்தூருக்கு நேரில் சென்று முதல்வர் சார்பில் நிதியுதவியும், ஆறுதலும் தெரிவிக்கிறேன். திருச்செந்தூர் கோவில் யானை தொடர்பாக வனத்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அங்குள்ள சூழ்நிலையை அவர் சுட்டிக் காட்டுவது போல் எடுத்துக் கொள்கிறோம். குறைகள் இருப்பின் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும்.
அனைத்து கோவில்களிலும் யானைகள் வனத்துறையின் அனுமதியுடன் பராமரிக்கப்படுகிறதா என சரிபார்க்க கேட்டுள்ளோம். அப்படி அனுமதி கிடைக்காத கோவில்களில், வனத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, அந்த அனுமதியை பெற, நிச்சயம் முயற்சி எடுப்போம். கடந்த ஆட்சியில் யானைகளுக்கு குளியல் தொட்டி இல்லை, மாதம் இருமுறை மருத்துவ சிகிச்சை இல்லை, உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானையை காப்பாற்ற டென்மார்க்கில் இருந்து மருத்துவரை வரவழைத்தோம். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் யானைகள் மீது அதிக அக்கறை உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி எந்த யானைக்கு என்னென்ன உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் தேவையோ அத்தனையும் அப்படியே கொடுக்கப்படுவதால் புத்துணர்வு முகாமுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை படிப்படியாக அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவுப்படி, திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோவில்களில் தற்போது அமலில் உள்ளது. அனைத்து கோவில்களிலும் மொபைல் போன்களை பாதுகாக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.