திருமலை: திருமலையில் நேற்று 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோத்ஸவம் முடிந்த பிறகு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாகம் வெகு விமரிசையாக நடத்தப்படும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றதை அடுத்து, உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமிக்கு நேற்று புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று திருமலை சம்பங்கி மண்டபத்தில் காலை பக்தர்களுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை உற்சவ மூர்த்திகளுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
புஷ்ப யாகத்திற்கு தமிழகத்தில் இருந்து 5 டன், தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து தலா ஒரு டன் என மொத்தம் 7 டன், முல்லை, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா, சம்பங்கி, துளசி, தவனம் என 17 வகையான பூக்கள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அலுவலர் வெங்கடையா சவுத்ரி, கோயில் இணை அலுவலர் லோகநாதம், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஸ்ரீநிவாசுலு, மக்கள் தொடர்பு அலுவலர் ரவி உள்பட 300-க்கும் மேற்பட்ட ஸ்ரீ வாரி சேவகர்கள் மற்றும் பணியாளர்கள் பூக்கள் நிரப்பப்பட்ட கூடைகளை கோயிலுக்கு கொண்டு வந்தனர்.