சென்னை: மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வைத்து, வழிபாடு செய்தால் எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களையும் உங்கள் வீட்டையும் எதுவுமே செய்ய முடியாது.
வீட்டில் உள்ள ஆண்களும் இந்த பூஜையை செய்யலாம். பெண்களும் செய்யலாம். ஆனால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜை செய்யக்கூடிய 48 நாட்களும் உங்களுடைய வீடும், நீங்களும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.
காலையில் எழுந்து 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். வழக்கம் போல வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய பூஜை அறையை எப்படி சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்கிறார்களோ, அதே போல 48 நாட்களும் உங்களது பூஜை அறையை சுவாமி படங்களை அலங்காரம் செய்யப்பட்டு புதியதாக பூக்களைப் போட்டு இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் தினமும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, தரையில் அரிசி மாவால், பிள்ளையார் சுழியும், ‘ஓம்’ என்னும் மந்திரத்தை எழுதி வைக்க வேண்டும்.
அதன் பின்பு உங்களுக்கு தெரிந்த சிறிய கோலத்தைப் போட்டு கொள்ளுங்கள். கட்டாயம் பச்சரிசி மாவால் தான் இந்த கோலம் போடப் பட வேண்டும். அந்த கோலத்தின் மேல் வெற்றிலை, வாழையிலை எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அந்த இலையின் மேல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு பொட்டு வைத்து, பூ வைத்து விட வேண்டும்.
அதன் பின்பு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பூக்களாலும் அருகம்புல்லும் அலங்காரம் செய்துவிட்டு, உதிரி புஷ்பம் கொண்டு 108 முறை பிள்ளையாரின் மந்திரத்தை உச்சரித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு வரி மந்திரத்தையும் தாராளமாக உச்சரிக்கலாம். எடுத்துக்காட்டாக ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ ‘ஓம் ஆனை முகத்தோனே போற்றி’ ‘ஓம் ஐந்து கரத்தனே போற்றி’ இப்படியாக உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை சொல்லுங்கள். அடுத்தபடியாக அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு தீப தூப ஆராதனை காட்டி முடிந்த நிவேதனம் படைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
தினந்தோறும் பழைய கோலத்தை துடைத்து, பழைய வெற்றிலையை மாற்றி, பழைய மஞ்சள் பிள்ளையாரை எடுத்து விட்டு, புதியதாக கோலம் போட்டு, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து தான் பூஜை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 48 நாட்களும் மஞ்சள் பிள்ளையாரை ஒரு சுத்தமான சொம்பில் தண்ணீரை வைத்து, அதில் கரைத்து விடுங்கள். உங்களுடைய துன்பம் கரைந்து போய்விடும். 48 நாட்கள் ஒரு வீட்டில் விநாயகரது மந்திரம் ஒலிக்கப்பட்டு, மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வைத்து, வழிபாடு செய்தால் எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களையும் உங்கள் வீட்டையும் எதுவுமே செய்ய முடியாது. புதிதாக நீங்கள் ஒரு வீட்டில் குடி சென்றாலும் இந்த பூஜையை செய்யலாம் புதியதாக கடை அல்லது தொழில் செய்யும் இடம் வைத்தாலும் அந்த இடத்தில் இந்த பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். பெரிய பெரிய யாகங்கள், பெரிய பெரிய ஹோமங்கள் நடத்திய பலனை 48 நாட்களில் உங்கள் கையால் செய்யக்கூடிய இந்த பூஜையின் மூலம், உங்களால் பெற முடியும்.