திருமலை: திருமலையில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று கூடுதல் செயல் அலுவலர் கவுதமி தலைமையில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:- தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவின்படி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அலகாபாத்தில் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை மகா கும்பமேளா நடக்கிறது.
அங்கு ஏழுமலையான் மாதிரி கோவில் கட்டி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது திருமலையில் பூஜைகள். இப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலத்தில் மாதிரி கோவில் கட்டி பூஜைகள் நடத்தினால் ஆன்மிகம் மேலும் பெருகும். எனவே, கோவில் கட்டப்பட்டு ஜனவரி 12-ம் தேதி சம்ப்ரோக்ஷணம், சிலை நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி 13 முதல், சுப்ரபாத சேவை முதல் ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகளும் நடத்தப்படும். இதில் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைவருக்கும் அன்னபிரசாதம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். இதுதவிர, தினமும் கோவில் சார்பில் இன்னிசை கச்சேரி நடத்தப்படும், என்றார். ரூ.4.18 கோடி நன்கொடை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 59,564 பேர் தரிசனம் செய்தனர். 24,905 பேர் முடி தானம் செய்தனர். 4.18 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ வளாகத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை பகுதி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் காத்திருந்தனர். 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.