திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், ஊடல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் காலம் தட்சிணாயன புண்ணியகாலம் என்றும், சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலம் உத்ராயண புண்ணியகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் திருவண்ணாமலையில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம் (தட்சிணாயன புண்ணியகால உற்சவம்), உத்ராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயன புண்ணியகால உற்சவம் ஆகியவை சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். ஆனால், ஆடிப்பெருக்கு பிரம்மோத்ஸவத்திற்கு மட்டும் உண்ணாமூலை அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்படும்.
இந்த ஆண்டு உத்ராயண புண்ணியகால உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, கோபூஜை, திருப்பலி உற்சவத்தை தொடர்ந்து, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. விநாயகர், அண்ணாமலையார் பிரியாவிடையை தொடர்ந்து உண்ணாமூலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்க கொடி மரத்தின் முன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளினார்.
தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க உத்ராயண புண்ணியகால பிரம்மோத்ஸவ கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். அப்போது, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையார் அரோகரா, உண்ணாமூலையம்மன் அரோகரா’ என கோஷமிட்டு தரிசனம் செய்தனர். இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை, இரவு விநாயகர், சந்திரசேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் நிறைவு நாளான, வரும், 14-ம் தேதி, தாமரைக் குளத்தில், தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர், அண்ணாமலையார் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் விழா வரும் 15-ம் தேதியும், 16-ம் தேதி காலை அண்ணாமலையார் கிரிவலமும், மாலையில் மருவுதல் திருவிழாவும் நடக்கிறது. இந்நிலையில், அண்ணாமலையார் கோவிலில் வழக்கம்போல் இன்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.