சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் உலகளாவிய வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்களை சந்திக்கும் வகையில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதை
‘மீசைய முறுக்கு’ முதல் பாகம் ஆதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சுயசரிதைத் தன்மை கொண்ட கதையாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் அதைவிட பரந்த உலகத்தைக் கொண்டதாக உருவாகியுள்ளதாக ஆதி தெரிவித்துள்ளார்.
இசையை வாழ்க்கைப் பாதையாக தேர்வு செய்யும் கலைஞர்களின் கனவுகள், போராட்டங்கள், உறவுகள் மற்றும் பயணங்களை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
கானா கலைஞர்களின் வாழ்க்கை
குறிப்பாக வடசென்னையின் இசைச் சூழலையும் கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் படம் பதிவு செய்கிறது. தங்களது அனுபவங்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பாடல்களாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகம் கதையில் முக்கிய இடம் பெறுகிறது.
படத்தில் ஹிப்ஹாப் ஆதி, கெத்திகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் ஏற்கெனவே கவனம் பெற்றுள்ளன.
