சென்னை: லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான சன் நெக்ஸ்டில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை ரசிகர்கள் காணலாம்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ‘டிசி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
என்ன கதை?
தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே ‘டி.சி.’ என படத்தின் தலைப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேங்ஸ்டராக வரும் லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார். மேலும் ஒரு போலீஸ் அதிகாரியை கொடூரமாக கொலை செய்கிறார்.
இதையடுத்து ஓட்டல் ஒன்றில் பதுங்கியிருக்கும் லோகேஷை போலீசார் கைது செய்கின்றனர். அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவையும் போலீசார் சுட்டு வீழ்த்துகின்றனர். பின்னர் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்கும் லோகேஷ், எதிர்பாராத சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வமிகா கபியை சந்திக்கிறார்.
தனக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து வரும் வமிகா கபி, ஒரு கட்டத்தில் லோகேஷுடன் இணைந்து பயணிக்கிறார். உயிருக்கு பயந்து ஓடும் லோகேஷ் கனகராஜும், அவருடன் இணையும் வமிகா கபியும் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளது.
ரசிகர்களிடம் கவனம்
லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் என்பதால் ‘டிசி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், வசூலிலும் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 4-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ‘டிசி’ வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை ரசிகர்கள் காணலாம்.
