விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணைந்த கூட்டணி
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமான சாய் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
சிறுவனின் நடிப்புக்கு பாராட்டு
படத்தை பாராட்டி ஷங்கர் வெளியிட்ட பதிவில், ‘பத்தா’வில் நல்ல கதை, மனிதநேயம், நகைச்சுவை மற்றும் கைதட்டல் பெறக்கூடிய பல தருணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும், லிஜோமோல் ஜோஸ் இயல்பாக நடித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக சிறுவன் சாய் பிரித்விராஜின் நடிப்பு தன்னை கவர்ந்ததாக தெரிவித்துள்ள ஷங்கர், அவருக்கு தேசிய விருது வழங்கும் அளவுக்கு அந்த நடிப்பு இருப்பதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாய் அபயங்கரின் பின்னணி இசை சில காட்சிகளை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இயக்குநர் பாலாஜி தரணிதரனிடம் இருந்து மற்றொரு மறக்க முடியாத திரைப்படம் கிடைத்துள்ளதாகவும் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
