சென்னை: நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா, தனது நீண்டகாலக் காதலரான இத்தாலியைச் சேர்ந்த இசாயைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற இந்தத் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் உமாபதியைத் திருமணம் செய்துகொண்டார்.
இளைய மகள் அஞ்சனா பேஷன் டிசைனிங் படிப்பை முடித்ததுடன், பெண்களுக்கான கைப்பைகளைத் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இத்தாலியைச் சேர்ந்த இசாயுடன் கடந்த 14 ஆண்டுகளாகக் காதலில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அக்டோபர் 19-ம் தேதி ஸ்பெயினில் திருமணம் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது மகளின் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்த அர்ஜுன், 14 ஆண்டுகாலக் காதலைக் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
