சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் தங்கள் இமேஜை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்கிறார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வயது எவ்வளவு ஆனாலும் நாயகன் என்ற பிம்பத்தை விட்டுவிட விரும்புவதில்லை. ஆனால், நாயகிகளுக்கு வயது கூடுவதோடு வாய்ப்புகள் குறைந்து, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களே வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 60 வயதை நெருங்கும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு, 38 வயதான நடிகை ரித்தி டோக்ரா ‘ஜவான்’ படத்தில் தாயாக நடித்தது பெரும் பேசுபொருளானது. அட்லீ இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த ஹிந்தி படம் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
படத்தில் ஷாருக்கானுக்கு தாய் கதாபாத்திரமாக ரித்தி டோக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, முதலில் அவர் மறுத்துவிட்டாராம். காரணம், ஷாருக்கானை விட 20 வயது இளையவர் தான், அவருக்கு தாயாக நடிப்பது அபத்தமாக இருக்கும் என எண்ணினார். ஆனால், அட்லீ சமாதானப்படுத்தியதால் இறுதியில் ஒப்புக்கொண்டார்.
ரித்தி டோக்ரா பின்னர் கூறுகையில், “ஷாருக்கானுடன் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பேன் என நான் நினைத்ததே இல்லை. நான் அவரது ரசிகை என்பதால் இந்த வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை. ஆனால், இந்த நினைவிலிருந்து மீள, மீண்டும் அவருடன் வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்தனர். ரித்தியின் தாய் வேடம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியதோடு, படத்தின் வெற்றிக்கு தனித்துவமான அம்சமாக அமைந்தது.