சமீபத்தில், ‘கல்கி 2989 கி.பி’ படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதற்கான காரணங்களாக பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்பு, ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தீபிகா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும் என்று கூறியதே இதற்குக் காரணம் என்று பலர் கூறினர். இதற்கு தீபிகா படுகோனே முதல் முறையாக ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார். “இந்தியத் திரைப்படத் துறையில், பல்வேறு முன்னணி ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய ஒப்புக்கொண்டு வருகின்றனர். அது தலைப்புச் செய்திகளில் இடம்பெறவில்லை. ஆனால், நான் அதைச் சொன்னால், அது பெரிய செய்தியாகிறது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

சில ஆண் நடிகர்கள் வார நாட்களில் மட்டுமே வேலை செய்கிறார்கள், வார இறுதி நாட்களில் படப்பிடிப்புக்கு வருவதில்லை. இந்தியத் திரைப்படத் துறையில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, இது ஒரு ஒழுங்கற்ற திரைப்படத் துறையாகும். இது கட்டமைக்கப்பட வேண்டும். சமீபத்தில் பிரசவம் பார்த்த சில நடிகைகள் கூட 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதுவும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறவில்லை,” என்று அவர் அதில் கூறினார்.
மேலும், “நான் என் வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் என் போராட்டங்களை அமைதியாக எதிர்த்துப் போராடி வருகிறேன். சில நேரங்களில் அந்தப் போராட்டங்கள் பகிரங்கமாகிவிடும், நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இல்லை. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியமாகவும் எதிர்கொள்வதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”