சென்னை: அருண்பாண்டியன் முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அஃகேனம்‘ என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி, அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் கோகுல் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் உதய் கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம்‘ படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை விக்னேஷ் கோவிந்தராஜன் மேற்கொள்ள, இசையமைப்பாளர் பரத் வீரராகவன் இசையமைக்கிறார்.
திவேத்தியன் படத்தொகுப்பையும், ராஜா கலை இயக்கத்தையும் கையாள்கின்றனர். ஏ&பி குரூப்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் இப்படத்தை தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “படத்தின் பின்னணி இசை சர்வதேச தரத்தில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபல இசை அரங்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.