குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான ‘மகாராஜா’ சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி, முனீஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா, பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
நான் லினியர் முறையில் ஆழமான கருத்தை சொல்லும் திரைக்கதையின் மூலம் மக்கள் நெஞ்சங்களில் கனத்தை ஏற்படுத்தியது இந்த படம். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற மகாராஜா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மகாராஜா படத்தை பார்க்க திரையரங்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக பட்டையை கிளப்பி வருகிறது விஜய் சேதுபதியின் மகாராஜா. வெளியான முதல் பத்து நாளில் மகாராஜா திரைப்படம் ரூ. 81 கோடி வசூலை குவித்துள்ளது. இருந்தபோதிலும், கல்கி 2829 AD படத்தின் வசூல் வேட்டையால், மகாராஜா படத்தின் வசூல் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால், விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்படி 100 கோடியை தொட்டுவிட்டால், 100 கோடி வசூல் செய்த முதல் விஜய் சேதுபதியின் படம் மகாராஜாவாகத்தான் இருக்கும்.
மேலும், USA பாக்ஸ் ஆபிசில் $500K, அதாவது இந்திய மதிப்பின்படி, ரூ. 4.1 கோடி வசூலித்து 2024 ஆம் ஆண்டுக்கான அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற உயரிய பெருமையை மகாராஜா திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனும், படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மகாராஜா திரைப்படம் Special Screening-ல் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.