சென்னை: நடிகர் கார்த்தியின் பிறந்த நாளில் இருந்து தற்போது வரைக்கும் 515 பேர் தமிழ்நாடு முழுவதும் இரத்ததானம் செய்திருக்கிறார்கள். இது நடிகர் கார்த்தியை நெகிழவைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் கடந்த ஒருவார காலமாக பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர்த்து நடிகர் கார்த்தியின் பிறந்த நாளில் இருந்து தற்போது வரைக்கும் 515 பேர் தமிழ்நாடு முழுவதும் இரத்ததானம் செய்திருக்கிறார்கள்.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது என்றில்லாமல் பொது மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களின் இந்த செயலால் நடிகர் கார்த்தி நெகிழ்ந்து ரசிகர்களை பாராட்டி இருக்கிறார்.