சென்னை: ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ‘பவர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் சீனிவாசன். அவர் திடீரென அரசியலில் நுழைந்து 2019 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
சினிமா, அரசியல் தாண்டி இவர் ஒரு தொழிலதிபரும் கூட. அவர் மீது சில புகார்கள் இருந்தாலும், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் டாக்டர் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு காரணமாக அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஒரு வார காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.