சென்னை: நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விக்ரம் வீர தீர சூரன் 2 படத்திற்கு பிறகு, மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் 96, மெய்யழகன் இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தங்கள் நிறுவனம் இயக்கும் முக்கியமான படங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் பட்டியல் குறித்த ப்ரமோ வீடியோவை வெளியிட்டு தமிழ் சினிமாவில், பலரின் கவனத்தை ஈர்த்த வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குநர் பிரேம் குமார், தனது அடுத்த படத்திற்கு ‘சியான்’ விக்ரமை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
’96’ மெய்யழகன் போன்ற கல்ட் கிளாசிக் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரேம்குமார் அடுத்து 96 படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த படம் கைவிடப்பட்டு விக்முடன் வேறொரு கதையில் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக மென்மையான காதல் அல்லது மனதை வருடும் பொழுதுபோக்கு படங்களை இயக்கும் இயக்குனர் பிரேம் குமார், முதன்முறையாக ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். இது அவரது இயக்கத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் இயக்குநர் பிரேம் குமாரும், நடிகர் விக்ரமும் முதல்முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.