சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பெயர் பெற்ற தேவயானி, பல மொழிப்படங்களில் நடித்து தனக்கென தனிச்சிறப்பை ஏற்படுத்தியவர். காதல் கோட்டை, சூர்யவம்சம் உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய தேவயானி, சமீபத்தில் தனது காதல் கணவர் ராஜகுமாரன் குறித்து உணர்வுப்பூர்வமான தகவல்களை பகிர்ந்துள்ளார். டாப் ஹீரோயினாக இருந்த தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் இயக்கிய நான்கு படங்களில் நடித்திருந்தார். அதன்போது, இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது, தேவயானியின் மகள் இனியா, ‘Zee தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமபா சீசன் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது பாடல் திறமையை நிரூபித்து வருகின்றார். தேவயானி சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் ராஜகுமாரனுடன் நடத்திய வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
அந்த பேட்டியில், “நீ வருவாயா” படத்தில் நடித்தபோது வந்த காதல் வசனங்களே, ராஜகுமாரனை விரும்புவதற்கான காரணமாக இருந்தது என தேவயானி தெரிவித்தார். “அந்த படம் ஒரு லவ் என்சைக்ளோபீடியா மாதிரி. ஒவ்வொரு வசனத்திலும் காதல் இருக்கிறது. அவ்வளவு அழகாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்தபோதே இந்த மனிதர் மனத்தில் எவ்வளவு காதல் இருக்கிறது என நினைத்தேன். அதே நேரத்தில் அவர் என்னைப் படத்தில் அழகாக காட்ட நினைத்தார் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என தெரிவித்துள்ளார்.
அதன்பின் ராஜகுமாரனும் பேசியபோது, “திருமணத்திற்கு பிறகு நமக்கு குழந்தை வேண்டாம் என்று கூறினார். ஏனெனில் நாமே இப்படிப்பட்ட உலகத்தில் பிறந்து இவ்வளவு சிரமப்படுகிறோம். நம்மளுடைய குழந்தையும் பிறந்து இந்த சிரமத்தை அனுபவிக்க வேண்டுமா என எண்ணினேன். நான் தேவயானியிடம், உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை. நாம இரண்டு பேரும் இருந்தால் போதும் என சொன்னேன். ஆனால் தேவயானி அதற்கெதிராக குழந்தை வேண்டும் என உறுதி கொண்டிருந்தார். அந்த எண்ணத்திலேயே பல கோயில்களுக்கு சென்று வேண்டினார்,” என்று கூறினார்.
அவரது வேண்டுதலின் பரிசாக, ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டியபோது, சொர்க்கவாசல் திறக்கும் நாளில் முதல் மகள் இனியா பிறந்ததாக தெரிவித்தார். தற்போது இநியா, பாட்டுப்பாடி அசத்தி வருகிறார். இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு சினிமா மீது ஆர்வம் அதிகம். அவர் ஷாருக்கானின் ரசிகை என்றும், அவர் படம் வந்தால் முதல் நாளே பார்த்துவிடுவார் என்றும், ஒருநாள் ஷாருக்கானுடன் நடிக்கவேண்டும் என்பதே அவரது கனவு என்றும் ராஜகுமாரன் கூறினார்.
இந்த உணர்ச்சி வசீகர பேட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவயானியின் வாழ்க்கையின் பின்னணி, அவரது உறவுகள், தாய்மையின் அனுபவங்கள் அனைத்தும் இந்த உரையாடலில் வெளிப்பட்டு, ரசிகர்களை மேலும் இணைத்துள்ளது.