சென்னை: தெலுங்கு பேசும் மக்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த 21-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை கையெழுத்துப் போட வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆக்ரோஷத்தை குறைத்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது முடிவு. குறிப்பாக, 30 நாட்களில் உணர்ச்சிவசப்படாமல், பக்குவமாகப் பேசுவதைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நான் கடந்த 4 வருடங்களாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். இரண்டு படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறேன்.
இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. என் மகனும் அங்கேயே படிக்கிறான். எனது மகனின் படிப்பும் தடைபட்டுள்ளதால், காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நடைமுறையில் தளர்வு கேட்டுள்ளேன். இது தொடர்பான மனு வரும் 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எனக்கு ஏற்ற நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த விவகாரத்தில் கானா பாடகி இசவானி மீது நடவடிக்கை எடுக்காததன் காரணம் அனைவருக்கும் தெரியும். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விஜேபி கட்சிகளும், பொதுமக்களும் எனது கைதுக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.