சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கும் யோகா பயிற்சியாளர் லவல் தவானுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா பாண்டியன் 2015-ல் வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.அடுத்து ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றார்.
தொடர்ந்து ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘குக் வித் கோமாளி‘, ‘பிக் பாஸ்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிய யோகா மாஸ்டர் லவல் தவானுடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
இதன் நீட்சியாக நவம்பர் 8-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கோவிலில் இருவரும் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 15-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.