பரேலி: உத்தரபிரதேசத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய கோல்டி பிராரின் கும்பல், இது வெறும் டிரெய்லர் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பாலிவுட் நடிகை திஷா பதானியின் மூதாதையர் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிவிட்டனர்.
தலைமறைவான தாதா கோல்டி பிரார் கும்பல் இந்த தாக்குதலுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பொறுப்பேற்றுள்ளது. பைக்கில் வந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் திஷாவின் தந்தை, ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திஷாவின் தந்தையின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரேலி போலீசார் தெரிவித்தனர். சமூக ஊடகப் பதிவில், நடிகை திஷா பதானி மற்றும் அவரது சகோதரி குஷ்பு பதானி ஆகியோர் இந்து ஆன்மீகத் தலைவர்களான பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோரை அவமதித்ததற்குப் பழிவாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கோல்டி பிரார் கும்பல் தெரிவித்துள்ளது.
மேலும், “இது வெறும் டிரெய்லர். இனிமேல் அவர் அல்லது திரையுலகைச் சேர்ந்த வேறு யாராவது எங்கள் மதத்தை அவமதித்தால், அவர்களை உயிருடன் வீட்டை விட்டு வெளியேற விடமாட்டோம்” என்று அந்தக் கும்பல் தங்கள் பதிவில் மிரட்டல் விடுத்துள்ளது. பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் மற்றும் பாடகர் ஏ.பி. தில்லானின் வீட்டின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, கோல்டி பிரார் கும்பல் திரைப்பட பிரபலங்களின் தொடர்ச்சியான இலக்காக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.