சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகும் நிலையில் சூர்யா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விளம்பரம் செய்து வருகிறார்.
‘கங்குவா’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்த பேட்டியில், மீண்டும் 6 பேக் வைத்திருப்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், “இப்போது 49 வயதாகிறது. ‘கங்குவா’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாபி தியோல் சாருடன் சண்டை போட வேண்டும். அந்த சண்டைக் காட்சி மிக நீளமாக உள்ளது. அதன் முடிவில் சட்டையில்லாமல் சண்டை போட்டால் எப்படி இருக்கும் என்று சொன்னார்கள். அப்புறம் படப்பிடிப்பு இடையே 100 நாட்கள் டயட் திட்டம் தொடங்கினேன். அந்த நாட்களில் நான் முடிந்தவரை சாப்பிடாமல் டயட்டில் இருந்தேன்.
இது பார்வையாளர்களை நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 6 பேக் எடுப்பது எனக்கு சவாலாக இருந்தது,” என்றார் சூர்யா. ‘கங்குவா’ படத்திற்கு முன் ‘ஏழாம் அறிவு‘ படத்திற்காக சூர்யா 6 பேக் அணிந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.