புதுடில்லி: சினிமா உலகின் பிரபல தம்பதிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன், தங்களின் போட்டோக்கள் மற்றும் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறாக பயன்படுத்தி ஆபாச வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்வீடியோக்கள் யூடியூப் மூலம் பரவியதாக கூறி, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக ரூ.4 கோடி இழப்பீடு கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனு கடந்த செப்டம்பர் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களை குறைசொல்லும் வகையில் உருவாக்கப்பட்ட அனைத்து டீப் பேக் வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான வீடியோக்கள் பதிவிடப்படாத வகையில் யூடியூப் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்களின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதியின்றி ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்த முடியாத வகையில் சட்டபூர்வ தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒரு யூடியூப் சேனலில் நடிகர்கள் சல்மான் கான், அபிஷேக் பச்சன் மற்றும் நடிகைகள் பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் உள்பட பல பிரபலங்களை குறிவைத்து 250க்கும் மேற்பட்ட டீப் பேக் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை மொத்தம் 1.65 கோடி பார்வைகளை பெற்றுள்ளன. இதில், சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தற்போது டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களின் பொறுப்புகள், பிரபலங்களின் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் ஏஐ பயன்பாட்டின் ஒழுங்குமுறை குறித்து இந்த வழக்கு முக்கியமான தீர்ப்பை உருவாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.