சென்னை: மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன. ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இயக்க முடியவில்லை; அதன் காரணமாக அவர் கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய படம் மங்காத்தா. நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இதற்கிடையே கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் 53-வது பிறந்தநாளை கொண்டாட மங்காத்தா ரீ – ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
வெங்கட் பிரபு அஜித் மீண்டும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட கால விருப்பமாக உள்ள நிலையில் அதுகுறித்து புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. விடாமுயற்சி, குட் பேட் அகலி ஆகிய படங்களின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் அஜித் அடுத்து எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் சார் படத்தை இயக்க பல முறை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இயக்க முடியவில்லை; அதன் காரணமாக அவர் கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.