ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி டிசம்பர் 4-ம் தேதி இரவு நடைபெற்றது. இதில் நெரிசலில் சிக்கி ரேவதி (35) உயிரிழந்தார். கூட்ட நெரிசலில் பலத்த காயமடைந்த அவரது மகன் ஸ்ரீதேஜ் (9) ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதியின் குடும்பத்துக்கு தெலுங்கானா அரசு ரூ. 25 லட்சமும், புஷ்பா படக்குழுவினர் ரூ. 2 கோடியும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அல்லு அர்ஜுனுக்கும் நிரந்தர ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராம்கோபால்பேட்டா காவல் நிலையத்தில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், தற்போது கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜை சந்திக்க அல்லு அர்ஜுன் வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் வந்தால் சாட்சியை மாற்றிக் கொள்ளலாம். அவர் மருத்துவமனைக்கு வந்தால் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிம்ஸ் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.