தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் அனிருத். தற்போது இவர்தான் மிக அதிகமான ஹிட் பாடல்களை வழங்கும் இசையமைப்பாளராக இருக்கிறார். வேட்டையன், இந்தியன் 2, தேவரா, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் இசையமைத்து தற்போது ரஜினியின் ‘கூலி’ மற்றும் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படங்களுக்கான இசையமைப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அனிருத் திரையுலகிற்கு ‘3’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படத்தில் இசையமைத்த இவர், “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடலால் உலகமெங்கும் பிரபலமானார். இப்படம் வெற்றியைப் பெறாதபோதிலும், இசை வலையில் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் அனிருத் ஒரு நாளில் இந்தியா முழுக்க பரவலாக பேசப்பட்டவர் ஆனார்.
இதனைத் தொடர்ந்து இளம் ஹீரோக்கள் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனிருத்தின் இசையை நம்பியுள்ளனர். ரஜினியின் ஜெயிலர், வேட்டையன், கூலி ஆகிய படங்கள், விஜய்யின் பல படங்கள் ஆகியவற்றில் இவர் இசையமைத்து வருகிறார். ஆனால் சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி மற்றும் இந்தியன் 2 படங்களில் இசை எதிர்பார்த்த அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அனிருத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் திரைப்பட இசையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கிறாராம். இதனால் வேலைகளும் தாமதமாகிவருகின்றன.
அதனால், சில மாதங்களுக்கு இசை நிகழ்ச்சிகளை நிறுத்தி படங்களுக்கான இசை பணியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அனிருத் முடிவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கும் திரைத் துறைக்கும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. மேலும், கூலி படத்திலிருந்து டி. ராஜேந்தர் பாடியுள்ள முதல் பாடல் நாளை வெளியாகவிருக்கிறது.