லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் இறுதி பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் அனுஜா குறும்படம் இடம் பிடித்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ், ஆல் வி இமேஜின் ஆஸ் லைட், ஆடுஜீவிதம், வீர் சாவர்க்கர் படங்கள் அனைத்தும் அதிரடியாக நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த ‘அனுஜா’ என்ற குறும்படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த படம் தயாரிப்பாளர்களில் மிண்டி கலிங் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் ஆகியோருடன் நடிகை பிரியங்கா சோப்ராவும் அடங்குவார். இந்த குறும்படத்தில், 9 வயது சிறுமி குழந்தை தொழிலாளராக பணிபுரிந்து பட்ட இன்னல்கள் குறித்து நெஞ்சை பிழியும் வகையில் காட்டப்பட்டுள்ளது.
லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் 180 குறும்படங்களுடன் போட்டியிட்டு, இறுதி பட்டியலில் ‘அனுஜா’ குறும்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்தியாவின் ‘தி எலிஃபென்ட் விஸ்பெர்ஸ்’ குறும்படம் ஆஸ்கர் விருது வாங்கியது.