ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஷேக் ஜானி பாஷா (எ) ஜானி மாஸ்டர் தமிழ் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது குழுவில் பணிபுரியும் 21 வயது பெண் நடன கலைஞர், ஜானி கடந்த வாரம் ஹைதராபாத் போலீசில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
அதில் அந்த பெண், “கடந்த 2019-ம் ஆண்டு ஜானி மாஸ்டர் எனக்கு உதவி நடன இயக்குனர் வேலை கொடுத்தார். படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை சென்றோம். அப்போது அவருக்கு 18 வயது ஆனபோது ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து, ஜானி மீது போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, செப்டம்பர் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் ஐதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜானி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஜூவாடி ஸ்ரீதேவி, ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது, வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது. வெளிநாடு தப்பிச் செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
முன்னதாக ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை பெற ஜானிக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஜானிக்கான தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.