தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கி தற்போது பாலிவுட் வரை புகழ் பெற்றுள்ள இயக்குநர் அட்லீ, வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார். பலர் அவரது படங்கள் பழைய கதைகளை மையமாகக் கொண்டதாக விமர்சித்தாலும், அதனைச் சவால் போல எடுத்துக்கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, அசத்தலான மேக்கிங்குடன் தொடர் ஹிட் படங்களை அளித்துள்ளார். தற்போது அவருக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியையும் கௌரவத்தையும் தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பெயர்பெற்ற சத்தியபாமா பல்கலைக்கழகம், அட்லீக்கு கௌரவ ‘டாக்டர்’ பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி அவர் “டாக்டர் அட்லீ” என அழைக்கப்படவுள்ளார். ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அட்லியின் திரைப்பயணம் இயக்குநர் சங்கரின் பட்டறையில் தொடங்கியது. ‘ஜென்டில்மேன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கிய சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அவருக்கு, அந்த அனுபவம் எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
அட்லி தனது முதல் படமான ‘ராஜா ராணி’யில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா போன்ற முன்னணி நட்சத்திரங்களை கொண்டு இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
பின்னர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கி, இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய வசூலைப் பெற்றார். இந்த படம் மட்டும் ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. இது அட்லியின் திறமையை தேசிய மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் நிலைநிறுத்தியது.
தற்போது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அல்லு அர்ஜுனுடன் ஹாலிவுட் தரத்தில் ஒரு புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அட்லியின் தொழில்நுட்ப திறமை மற்றும் வணிக உணர்வை பாராட்டும் வகையில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில், வரும் ஜூன் 14ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இது அவரது திரை வாழ்க்கையின் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது. அட்லி தொடும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக மாற, தற்போது கல்வி நிறுவனத்தின் அங்கீகாரமும் அவரை மேலும் உயர்த்தி நிறுத்தியுள்ளது.