சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’ உலகம் முழுவதும் ரூ. 1,500 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் அதிக வசூல் செய்த ‘ஸ்ட்ரீட் 2’ படத்தை ‘புஷ்பா 2’ முறியடித்து 15 நாட்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையவில்லை.
மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் தியேட்டர்களில் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் தற்போதுள்ள சூழலில் ‘புஷ்பா 2’ படத்தை தூக்கி நிறுத்த வாய்ப்பு இல்லை. இந்த நிலை அட்லீ தயாரிக்கும் ‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கலாகியுள்ளது. ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான இப்படம், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான தியேட்டர்கள் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்கு காரணம் ‘புஷ்பா 2’. பல்வேறு விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்த முன்பணத்தை கொடுக்க தயாராக இல்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும் என தெரிகிறது.