இயக்குநர் சிவாவின் தம்பி பாலா, தமிழ் திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு வீரம் படம் மூலம் ஓரளவுக்கு அடையாளம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அவரை சென்றடையவில்லை.
பாலா, 2016ஆம் ஆண்டு பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் நீடிக்காமல் விரைவில் விவாகரத்தானது. அதன் பிறகு, 2021ஆம் ஆண்டு, அவர் மருத்துவர் எலிசபெத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் மலையாள ஊடகங்களில் எழுச்சி ஏற்படுத்தின.
இந்த நேரத்தில், பாலா கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். இரண்டாவது திருமண நாளன்று மருத்துவமனையிலிருந்தே கேக் வெட்டி கொண்டாடிய அவர், தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், உடல்நிலை மீண்டும் சீராகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கிடையில், பாலாவின் திருமணங்கள் தொடர்ச்சியாக சர்ச்சைகளாக மாறின. மூன்று திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில், அவர் நான்காவது முறையாக கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே, அவரது முன்னாள் மனைவிகளான அம்ருதா மற்றும் எலிசபெத், சமூக வலைதளங்களில் அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்தனர். இதற்கு ஏதும் பதிலளிக்காமல் இருந்த பாலா, தற்போது தனது நான்காவது மனைவியுடன் கொச்சியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, முன்னாள் மனைவிகள் மீது அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.