நடிகை நிதி அகர்வால் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, ‘தி ராஜா சாப்’ படக்குழு அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில், நிதி அகர்வால் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யும் கிறிஸ்துவ பெண்ணாக காட்சியளிக்கிறார். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சஞ்சய் தத், போமன் இரானி, மாளவிகா மோகனன், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. சில ஒப்பந்த பிரச்சினைகள் காரணமாக தயாரிப்பில் சர்ச்சைகள் எழுந்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.
நிதி அகர்வால், கடைசியாக பவன் கல்யாணுடன் நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலகத்தலைவன்’ படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘தி ராஜா சாப்’ அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
அடுத்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த ஹாரர், காதல், காமெடி கலந்த திரைப்படம், பிரபாஸ் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படங்களில் ஒன்றாக திகழ்கிறது.