சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நிறைய ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இட்லி கடை, குட் பேட் அக்லி மற்றும் எஸ்.கே.25 என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜி. வி. பிரகாஷின் 25வது படமான ‘கிங்ஸ்டன்’ கலவையான விமர்சனத்தை பெற்றது. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பின்னணி இசை முடிவடைந்ததாக ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் பிளாக்மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.
“பிளாக்மெயில்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.