சென்னை: விடாமுயற்சி படம் தள்ளிப்போனாலும் பொங்கலுக்கு வரிசைக்கட்டி நிற்கிறது மற்ற நடிகர்களின் படங்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இருப்பினும், புத்தாண்டின் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ‘விடாமுயற்சி’ தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு 4 திரைப்படங்கள் விருந்தளிக்க வருகிறது.
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போன நிலையில், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் தள்ளிவைப்பால் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபி ராஜ் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ளது ‘டென் ஹவர்ஸ்’. த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. இப்படம் பொங்கலையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்து உள்ள படம் ‘சுமோ’. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆன்ந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் ‘ஃப்ரீடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.