சென்னை: நடிகர் தனுஷ் மீதான புகாருக்கு நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறியது உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 29.7.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை பாதுகாக்கிறார்களோ, அதே போல் எங்களது சங்க உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.
நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மேலும் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை.
கடந்த ஆறு மாத காலத்தில் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை வியாபாரம் செய்ய ஒ.டி.டி. தளம் மற்றும் சாட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர் களை காப்பாற்றிடவும் எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள் கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.