சென்னை: நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் திரையரங்குகளில் வசூல் செய்து வருகிறது. நடிகராக இருந்த சூரி, தொழிலதிபராக மாறி மதுரையில் பல இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஓட்டல் துவங்கி குறைந்த விலையில் உணவு வழங்கி வந்தார். தற்போது அந்த விடுதியில் தரமான உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை என சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஓட்டல் நிர்வாகம் விதிகளை மீறி கூடுதல் இடத்தை ஆக்கிரமிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அம்மன் ஓட்டல் நிர்வாகம், கரிமேடு பகுதியில் உள்ள சமையல் அறையில் உணவு தயாரித்து ஹோட்டலுக்கு கொண்டு செல்வதாகவும், நடிகர் சூரி மீதுள்ள வெறுப்பின் காரணமாக அந்த நபர் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரியின் அம்மன் ஓட்டல் இயங்கி வருகிறது. அந்த ஓட்டலில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. அதாவது, அம்மன் உணவகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் 433 சதுர அடி மட்டுமே, செப்டிக் டேங்க் மற்றும் செவிலியர் விடுதிக்கு இடையே உள்ள இடத்தை ஆக்கிரமித்து, கழிவுநீர் தொட்டியின் மேல் சமையல் செய்கின்றனர். காய்கறிகள் நறுக்குவது, சட்னி, சாம்பார் செய்வது என அனைத்து சமையல்களும் அங்கேயே செய்யப்படுகின்றன.
எலி, கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை நடமாடும் இடத்தில் தரமற்ற உணவைத் தயாரிக்கிறார்கள். பல நோயாளிகள் இந்த உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி செவிலியர் விடுதியில் ஜன்னல், கதவு திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கேன்களை அடைத்து வைத்துள்ளனர். இதனால் விடுதியில் தங்கியிருப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து அம்மன் ஓட்டலை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.