சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாலா, சமீபத்தில் காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். செப்டம்பர் 5 அன்று வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாலா மக்கள் சேவைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக, அவர் தனது உழைப்பில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி இலவச மருத்துவமனை கட்டி வருவதும், மருத்துவ செலவுகள், கல்விக் கட்டணம், ஆம்புலன்ஸ் போன்ற உதவிகளை செய்து வருவதும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆனால், இதுகுறித்து நடிகர் கூல் சுரேஷ் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஊடக பேட்டியில் அவர், “பாலா தம்பி நல்ல விஷயங்களை செய்து வருகிறார், அதற்கு பாராட்டுகள். ஆனால் அவனுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என எனக்கு தெரியவில்லை. அவன் ராஜ பரம்பரையா, ஜமீன்தாரா? இல்லையெனில், பின்னால் யாரோ இருக்கிறார்களா? இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “பாலா ஆம்புலன்ஸ் வாங்கித் தருகிறார், மருத்துவமனை கட்டுகிறார், பள்ளிக் கட்டணங்கள் செலுத்துகிறார், வண்டிகள் வாங்கித் தருகிறார். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? அவனது வீட்டில் ஏதாவது ‘அமுதசுரபி’ இருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல இணைய பயனர்கள், “பாலாவைப் பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை” என கூல் சுரேஷை விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், பாலாவின் தன்னலமற்ற சேவைகளை பெரும்பான்மையானவர்கள் பாராட்டி வருகின்றனர்.