விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் கரூரில் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததால், இந்த சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துயரச்சம்பவம் தமிழகமே அல்லாது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. இதனால் விஜய் தானே படக்குழுவிடம், இந்த சூழலில் பாடல் வெளியிடுவது ஏற்றதல்ல என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு படக்குழுவும் சம்மதித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த மாதம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி எந்த அப்டேட்டும் வெளியாவதில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா டிசம்பரில் மலேசியாவில் நடைபெறும் என்று ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்பது கூட சந்தேகத்திலேயே உள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, 80 சதவீத டப்பிங் உள்ளிட்ட பின் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் சிங்கிள் அல்லது டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. ஜனநாயகன் சோலோ ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படமும் பொங்கலுக்கு வெளியாகும். எனவே, ஜனநாயகன் படக்குழு எதிர்கொள்ளும் சிக்கல்கள் எவ்வாறு சமாளிக்கப்படுகின்றன என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.