2013 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான ராஞ்சனா, தனுஷின் முதல் ஹிந்திப் படமாகும். சோனம் கபூருடன் இணைந்து நடித்த இந்த படம், சோகமாக முடிவதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.

இந்த திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுவதற்கான முயற்சியில், அதன் கிளைமாக்ஸ் காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்த சோகமான முடிவை மாற்றி, மகிழ்ச்சியான முடிவாக மாற்றி வெளியிட தயாராகி வருகிறது.
இந்த மாற்றம் படத்தின் உணர்வுப் பலத்தை கலைத்துவிட்டதாக நடிகர் தனுஷ் கடும் அதிருப்தியைத் தெரிவித்தார். தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், இது அந்தப் படத்தின் ஆன்மாவையே அழித்துவிட்டது என்றும், கலைஞர்களின் நேர்மைக்கும் கதை சொல்லும் பாரம்பரியத்துக்கும் இது ஒரு ஆபத்தான முன்னேற்றம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இது போன்ற மாற்றங்கள் கலைஞர்களின் ஒப்புதல் இல்லாமல் நிகழும் போது, அது படைப்பாளியின் உரிமை மீறலாகும். இதனை எதிர்த்து தனுஷ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏஐ தொழில்நுட்பம் சினிமாவை மாற்றும் திறனைக் கொண்டிருந்தாலும், அதன் நிர்வாக பாவனை படைப்புச் சுதந்திரத்தைக் கெடுக்கக்கூடாது என்பது தனுஷின் வலியுறுத்தல். அவர் கடைசியாக, இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த சட்டங்கள் உருவாக வேண்டும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.