விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கியவர் அருண்குமார். இவரது திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றது. விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், பால சரவணன், தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
2014-ல் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தை இயக்கினார் அருண்குமார். இது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘சிந்துபாத்’ படத்தை இயக்கினார் அருண்குமார்.
அந்தப் படம் மாபெரும் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து சிறிது இடைவெளி விட்டு சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. ‘சித்தா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் பலர் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.