சென்னை: கிரிக்கெட்டை வைத்து தவெக தலைவர் விஜய்க்கு இயக்குனர் பாரதி கண்ணன் அட்வைஸ் செய்துள்ளார்.
திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். பாரதி கண்ணன் அண்மையில் நடிகர் கார்த்திக் குறித்து பேசிய நேர்காணல் இணையத்தில் வைரலானது. அதில், கார்த்திக் போலவே அவர் மிமிக்ரி செய்தது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், பாரதி கண்ணன் அண்மையில் கொடுத்த மற்றொரு நேர்காணலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய பாரதி கண்ணன், “விஜய்க்கு நல்ல பேச்சுத்திறமை உள்ளது. ஆனால் அவரிடம் உள்ள குறை என்றால்… அவரது கட்சியை கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அவரது அணியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் விஜய் தான். கேட்ச் பிடிப்பது அவர் தான். அவர் தான் கட்சியின் எல்லாமே. அவருக்கு அடுத்து அந்த கட்சியின் பேட்ஸ்மேன் என்று யாருமில்லை. எல்லாருமே நீங்க நல்ல ஆடுங்கண்ணே… நீங்க ஜெயிச்சிருவீங்க… நாங்க கூட இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
விஜய் அணியிடம் நல்ல வீரர்கள் இல்ல… பயிற்சியாளர்கள் இல்ல… ஆனால் எதிர் அணியான ஆஸ்திரேலியா அணியிடம் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அப்போ நாம் என்ன செய்ய வேண்டும். ஐபிஎல் மாதிரி வேறு நல்ல அணியில் இருந்து ஆட்களை வாங்கி அணியை பலப்படுத்த வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு சண்டை செய்யமுடியும்.
பொதுவாக சினிமா காரர்களிடம் ஒரு பிரச்சனை உள்ளது. அவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்… ஆனால் களத்தை உணர்ந்து, நல்ல வீரர்களை அணியில் எடுத்தால் மோதுவதற்கு ஈசியாக இருக்கும்… அப்படி இல்லையென்றால் ஆஸ்திரேலியா ஈஸியா ஜெயிச்சிடும்… விஜயிடம் கூட்டம் இருக்கலாம்… ஆனா நல்ல வீரர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.