மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வரும் 10-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் வாலி மோகன்தாஸ் கூறும்போது, “சென்னையில் பணிபுரியும் ஹீரோ ஒருவர் தனது காதலியை திருமணம் செய்ய சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்து அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதை. படத்தில் பல விஷயங்கள் பார்வையாளர்களுக்குப் புரியும். இந்தக் கதைக்கு ஷேன் நிகம் கச்சிதமாக இருப்பார் என்று நினைத்தோம். அப்போது அவர் மலையாளத்தில் நடித்த ‘ஆர்டிஎக்ஸ்’ படம் ஹிட்டானது.
அவரைத் தொடர்பு கொண்டவுடனேயே தமிழில் நடிக்க ஆர்வம் காட்டினார். கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டார். இப்படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவும் அவனது ஈகோவும் படம் முழுக்க ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். இதில் ‘அலைபாயுதே’ படத்தின் ‘காதல் சடு குடு குடு’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளோம். முதலில் அந்தப் படத்திலிருந்து ‘யாரோ யாரோடி’ போன்ற கல்யாணப் பாடலைச் சேர்க்க நினைத்தோம். பிறகு ‘காதல் சடு குடு குடு’ பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவு செய்தோம். அனுமதி வாங்கி பயன்படுத்தியுள்ளோம்,” என்றார்.